குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமலையன் தெருவில் பரபரப்பை ஏற்படுத்திய 2½ வயது சிறுவன் கடத்தல் சம்பவம் நடந்த 30 நிமிடங்களிலேயே போலீசார் துரிதமாக செயல்பட்டு சிறுவனை பத்திரமாக மீட்டனர்.
வயதான பெண்மணி ஒருவரின் பெட்டிக்கடை அருகே அவரது 2½ வயது பேரன் விளையாடிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் சிறுவனிடம் பேச்சு கொடுத்து திடீரென அவரை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாயார் உடனடியாக சத்தமிட்டு, காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தார்.
தகவல் கிடைத்தவுடன் ரோந்து பணியில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு, குலசேகரன்பட்டினம் திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு கோயில் அருகே குழந்தையுடன் சென்ற தம்பதியினரை மடக்கிப் பிடித்தனர். கடத்தப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
விசாரணையில், அவர்கள் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த லிங்கதுரை (35) மற்றும் அவரது மனைவி ஜெயந்தி (33) என்பதும் தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் நடந்த 30 நிமிடங்களுக்குள் சிறுவனை மீட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரின் துரித நடவடிக்கைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.