தூத்துக்குடி வடகிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் எபநேசர், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கியமான அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளார். விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தாம் போட்டியிடவும், அவரது மனைவி முத்து சரண்யா ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவும் கட்சியின் சார்பில் வாய்ப்பு வழங்க வேண்டும் என தலைமைக் கழகத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக் கழக அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இம்மனுவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் முன்மொழிந்துள்ளார். ஓட்டப்பிடாரம் தொகுதி முத்து சரண்யாவின் பிறந்த புண்ணிய பூமி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதியில் இவர்களின் உறவினர்கள் சுமார் 70 ஆயிரம் பேர் வாக்காளர்களாக உள்ளதாக கூறப்படுகிறது. “வானம் பார்த்த பூமி” என்று அழைக்கப்படும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் மக்கள் ஆதரவுடன் தமிழக வெற்றி கழக வேட்பாளராக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
கட்சியின் தளபதி விஜய் தலைமையில் நடைபெறவுள்ள தமிழக சட்டசபையில், முத்து சரண்யா சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் முதல்வராக விஜய் ஆட்சியில் அமருவார் என்பது மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் முதல் பெண் வேட்பாளராக போட்டியிட மனுதாக்கல் செய்திருப்பது வரலாற்றுப் பதிவாக அமையும் என்றும், கழகத்தின் அனைத்து பொறுப்பாளர்களும் ஒன்றுபட்டு கட்சியை ஆட்சியில் அமர்த்த பாடுபட வேண்டும் என்றும் அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“அனைவரும் ஒன்றுபடுவோம்… தமிழக வெற்றி கழகத்தை ஆட்சியில் அமர்த்துவோம்!” என்ற உறுதியுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.