தூத்துக்குடி மக்களின் வளர்ச்சியை திமுக அரசு திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சித்ராங்கதன் குற்றம்சாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தூத்துக்குடி – அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை அமைப்பதற்காக மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கியதாக அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த 870 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில், தமிழக அரசு இதுவரை வெறும் 85 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே தேர்வு செய்து வழங்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதன் காரணமாக தற்போது வெறும் 18 கிலோமீட்டர் தூரத்திற்கே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய சித்ராங்கதன், இந்த ரயில் பாதை முழுமையாக அமைந்தால் தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிப்பதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய அரசு தமிழக மக்களுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், அவற்றை செயல்படுத்த விடாமல் திமுக அரசு தொடர்ந்து தடுத்து வருவதாகவும், இது தூத்துக்குடி மக்களுக்கு செய்யப்படும் துரோகம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த கருத்துகளை உள்ளடக்கிய அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.