ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் ஆயத்த மாநாடு தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு திமுக தொழிற்சங்க தலைவர் சுசி. ரவீந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிஐடியு சார்பில் ரசல், பேச்சிமுத்து; ஏஐடியுசி சார்பில் லோகநாதன், கிருஷ்ணராஜ்; எச்.எம்.எஸ் சங்கம் சார்பில் துறைமுகம் சத்யா, ராஜ்குமார்; ஏஐசிசிடியு சார்பில் சகாயம், மின்னல் அம்ஜத்; யூஎன்யுசி சார்பில் அலெக்சாண்டர், சரவணன்; எல்.பி.எப் சார்பில் முருகன், கருப்பசாமி; எஸ்.கே.எம் சார்பில் லெனின் குமார்; ஐ.என்.டி.யு.சி சார்பில் ராஜகோபால், ராஜு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் துறைமுகம், மின் விநியோகம், போக்குவரத்து, தெர்மல், என்டிபிஎல், பாரதி கூட்டுறவு, தாரங்கதாரா கெமிக்கல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைநிறுத்தத்திற்கு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, எச்.எம்.எஸ், யுடியுசி ஆகிய அனைத்து சங்கங்களும் நோட்டீஸ் வழங்கியுள்ளன.
மேலும் உப்பளம், தீப்பட்டி, கட்டுமானத் துறைகளில் வேலைநிறுத்தம் நடைபெறும். வேலைநிறுத்த நாளன்று ஆட்டோ, வேன், டாக்சி சேவைகள் இயங்காது. வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
மக்கள் விரோத, தொழிலாளர்–விவசாயி விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும், இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்தும் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தின் நோக்கங்களை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் பிப்ரவரி 4, 5, 6, 8, 9 ஆகிய தேதிகளில் 50 தெருமுனை கூட்டங்கள் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் 50,000 துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.
வேலைநிறுத்த நாளான பிப்ரவரி 12ஆம் தேதி தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், கயத்தார், திருவைகுண்டம் ஆகிய 6 மையங்களில் நடைபெறும் மறியலில் 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாகவும், இதற்கான தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.