தூத்துக்குடி சிவந்தாகுளம் முதல் முள்ளக்காடு வரை திருச்செந்தூர் பிரதான சாலையின் நடுவே சுமார் 9 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் தடுப்புச் சுவர், கட்டுப்பாடின்றி ஒட்டப்படும் சுவரொட்டிகள் மற்றும் டிஜிட்டல் பேனர்களால் தற்போது எலும்புக்கூடாக காட்சியளித்து வருகிறது.
பல கோடி ரூபாய் அரசு நிதியில் அமைக்கப்பட்ட இந்த தடுப்புச் சுவர் மீது, போக்குவரத்து சட்ட நடைமுறை விதிகளை முற்றிலும் மீறி தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால், போக்குவரத்து வண்ணங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் சேதமடைந்த சுவரை சிமெண்ட் கலவையால் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையிலும், ஈரம் காயாத நிலையில் மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், சில சுவரொட்டிகளில் சாதி மற்றும் மத மோதல்களை தூண்டும் வகையிலான வாசகங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இதனால் அடிதடி மற்றும் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாலையோரத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை கால்நடைகள் மேய்வதும், வாகன ஓட்டிகள் கவனம் சிதறுவதாலும், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் நிகழும் அபாயம் அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுவதோடு, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இந்த அவல நிலையை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், சட்டவிரோதமாக சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், போக்குவரத்து வண்ணங்களை அழித்து நகரின் அழகிய தோற்றத்தை சீர்குலைப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.