பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று தூத்துக்குடி மாநகரில் அமைதிப் பேரணி, மலர் அஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
மாவட்டக் கழக செயலாளரும், தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையிலும் உத்தரவின் பேரிலும் இந்த நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்படி, தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் உள்ள ராஜாஜி பூங்கா முன்பிருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு, புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலையை சென்றடைந்தது. அங்கு அவரது திருவுருவச்சிலைக்கு அமைச்சர் தலைமையில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.
மேலும், அமைச்சர் கீதாஜீவன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழக அமைப்புகள் சார்பாகவும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அந்த உறுதிமொழிகள் :
அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.
இந்த நினைவு தின நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை செயலாளர் ஜெனிட்டா உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர்.