இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் “இது நம்ம ஆட்டம் 2026” என்ற தலைப்பில் நடைபெறும் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 31.01.2026 மற்றும் 01.02.2026 ஆகிய இரு தினங்களில் தூத்துக்குடி தருவை மைதானம் / மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த விளையாட்டு போட்டிகளை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து, விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடையே சிறப்புரை ஆற்றினார்.
அவர்கள் உரையில், “இளைஞர்களின் உடல் வலிமை, மன வலிமை மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க விளையாட்டு முக்கிய பங்காற்றுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இளைஞர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ‘இது நம்ம ஆட்டம்’ போன்ற திருவிழாக்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர உதவுகிறது” என தெரிவித்தார்.
மாவட்ட அளவிலான இந்த விளையாட்டு போட்டிகளில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் பள்ளி, கல்லூரி மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டு துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாக பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.