தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரத விநாயகர் தெருவில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள், அய்யன் கோயில் தெரு பகுதியில் அமைக்கப்பட உள்ள கருத்தடை மற்றும் வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி அறைக்கான இடம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார். இம்முகாமில் பொதுமக்கள் தங்களது அடிப்படை தேவைகள், சாலை, குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ரோச் பூங்காவிற்கு எதிர்புறம் உள்ள எகோ பார்க் செல்லும் சாலையில் புதிய பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான இடம், துறைமுகம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வரும் மாநகராட்சி பூங்கா பணிகள் ஆகியவற்றையும் மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல், இரண்டாம் கேட் அருகே உள்ள தெப்பக் குளத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்து விரைந்து பணிகள் முடிக்க அறிவுறுத்தினார்.
இந்நிலையில், மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் புதிய சாலை, வடிகால் மற்றும் பூங்கா பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் உள்ள கூட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் நடப்பு மற்றும் வரவிருக்கும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அதிக பயன் அளிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி வலியுறுத்தினார்.
தூத்துக்குடி மாநகரின் அடிப்படை
வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு நேரடி தீர்வுகளை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த தொடர் ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.