தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள முத்துநகர் பொதுமக்கள் சார்பில் முத்தையாபுரம் பகுதி திமுக பொருளாளர் ஒ.முத்துராஜா, பகுதி திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக ஆகியோர் வீட்டிற்கு செல்லும் பாதை மற்றும் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி புகார் மனு அளித்தனர்.
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முத்து நகர் பகுதியில் வசித்து வரும் ஒ.முத்துராஜா, மற்றும் அசோக் ஆகியோர் தங்களது குறைகளை விரிவாக எடுத்துரைத்தனர். இடத்திற்குரிய பாதையையும் சாலையையும் சுந்தரபாண்டி என்பவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரது மகன் மாநகராட்சியில் பணிபுரிவதை காரணமாகக் கொண்டு அதிகார பலத்தை பயன்படுத்தி, வீட்டின் அருகே இருந்த மின் கம்பம் மற்றும் தெரு விளக்கையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, வீட்டிற்கு செல்லும் வழி முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மழைக்காலங்களில் குடும்பத்தினருடன் வீடு செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு காரணமாக அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மனுவில் சுட்டிக்காட்டினர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, தனக்கு உரிய பாதை மற்றும் சாலையை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயரிடம் ஒ.முத்துராஜா, மற்றும் அசோக் கோரிக்கை விடுத்துள்ளனர்.