வாழும்கலை (The Art of Living) நிறுவனர், உலகப் புகழ்பெற்ற ஆன்மிக குரு குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள், 2026 ஜனவரி 29ஆம் தேதி தூத்துக்குடி வருகை தருகிறார். இதையொட்டி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் அன்று மாலை 5 மணிக்கு காணம், ஞானம், தியானம் அடங்கிய மாபெரும் சத்சங்க நிகழ்வு “ஆனந்த சங்கமம்” நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் பாபநாசத்தில் பிறந்த குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள், 1981ஆம் ஆண்டு பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு “வாழும்கலை” அமைப்பை நிறுவினார். இன்று உலகின் 182க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, சுமார் 80 கோடி மக்களை சென்றடைந்துள்ளது. குருதேவர் வழங்கிய சுதர்சன கிரியா சுவாச பயிற்சி, தியானம் மற்றும் யோகா பயிற்சிகள் மூலம் மனஅழுத்தம், பதட்டம், மனச்சோர்வு ஆகியவற்றில் இருந்து விடுபட உதவுவதாக கூறப்படுகிறது.
வாழும்கலை அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC சிறப்பு ஆலோசனை அந்தஸ்தையும் பெற்றுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், கிராமங்கள், சிறைச்சாலைகள், ஆயுதப்படைகள் உள்ளிட்ட பல துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு, சமூக மாற்றத்திற்கு முக்கிய பங்காற்றி வருகிறது.
மேலும், 75 நதிகள் புனரமைப்பு, 30 லட்சம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி, 10 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடவு, 1,356 கிராமப்புற இலவச பள்ளிகள், 56 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மனநலம் சார்ந்த பயன்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சத்சங்க நிகழ்ச்சியில் பெங்களூர் ஆசிரமத்தைச் சேர்ந்த ஆன்மீக இசைக் குழுவினர் பங்கேற்று இசை நிகழ்ச்சி வழங்க உள்ளனர். கலந்து கொள்பவர்களுக்கு ருத்ராட்சம் மற்றும் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாழும்கலை அமைப்பின் ஆசிரியரும் செய்தித் தொடர்பாளருமான மணிகண்டன் தலைமையில், தூத்துக்குடி வாழும்கலை நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக, இன்று மணிகண்டன் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.