Breaking News

“பொங்கல் அரசியல் அல்ல; பொறுப்பை மறைக்க முடியாது” – கனிமொழி குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பதிலடி!!

  • Share on

தேர்தல் காலத்தில் மட்டுமே பிரதமர் பொங்கல் கொண்டாடுவதாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி. தெரிவித்த விமர்சனங்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனத்துடன் விரிவான பதிலை அளித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


“பொங்கல் என்பது அரசியல் நாடகமல்ல; அது தமிழர்களின் உயிரோடு கலந்த பாரம்பரிய திருநாள். பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நேரங்களில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் விவசாயிகளின் உழைப்பை மதித்து, தமிழர் பண்பாட்டு விழாக்களை மரியாதையுடன் கொண்டாடி வருகிறது.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகளின் நலனுக்காக ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’, பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடியாக பயன் அளித்து வருகிறது.


ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டங்கள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன. விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்காததால் நெல் உள்ளிட்ட முக்கிய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பொறுப்பேற்க வேண்டிய நிர்வாகமும், மக்களவை உறுப்பினரும் இதுவரை எந்தத் தீர்வு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.


மேலும், அரசு சார்பில் நெல் கொள்முதல் முறையாக நடைபெறாமல், கொள்முதல் மையங்களில் காலதாமதம், எடை குறைவு, பணம் வழங்குவதில் தாமதம் போன்ற பிரச்சினைகள் தொடர்கின்றன. இதன் காரணமாக விவசாயிகள் தனியாரிடம் குறைந்த விலைக்கு விளைச்சலை விற்கத் தள்ளப்பட்டுள்ளனர்.


இதனுடன், உரத் தட்டுப்பாடு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நிலவி, விவசாய பணிகள் முடங்கியுள்ளன. இத்தகைய அடிப்படை விவசாய பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள், பிரதமர் மீது அரசியல் நோக்கத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வருத்தமளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து அவர் கூறுகையில், “விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, சமூக நீதி குறித்து பேசும் கனிமொழி அவர்கள், திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஏற்பட்ட தோல்வி, தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி போதிய அளவில் இல்லாத நிலை ஆகியவற்றை, தம்மிடம் உள்ள நிர்வாகப் பொறுப்பை உணர்ந்து பரிசீலிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.


மேலும், “தமிழ் மொழி, தமிழ் பண்பாடு குறித்து பேசும் கனிமொழி அவர்கள், மத்திய அரசு தமிழுக்கு வழங்கி வரும் நிதி, செம்மொழித் தமிழ் வளர்ச்சி, உலக அளவில் தமிழை எடுத்துச் செல்லும் முயற்சிகள் குறித்து மௌனம் காப்பது ஏன்?” என கேள்வி எழுப்பிய அவர்,
“பாரதிய ஜனதா கட்சி தமிழர் நலனுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதியாக செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.


இறுதியாக, கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் லாபத்திற்காக கூறப்பட்டவை; உண்மை நிலவரத்திற்கு முற்றிலும் மாறானவை என தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தெளிவுபடுத்தினார்.


  • Share on

தூத்துக்குடி 30வது வார்டில் பொங்கல் கோலப்போட்டி – வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பரிசு வழங்கல்!!

முன்னாள் முதல்வர் “எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் சமூக சேவையுடன் எழுந்த அதிமுக விழா – முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள்”

  • Share on

Trending News