தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மாநகர மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி கொண்டாடும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக முத்து நகர் கடற்கரை பூங்கா மற்றும் ரோச் பூங்காவை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பூங்காக்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுத்தம், அலங்காரம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான வசதிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, பொங்கல் பண்டிகை நாட்களில் மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் நேரம் செலவிடும் வகையில் பணிகளை விரைந்து நிறைவேற்ற அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலை அமைக்கும் பணிகள் தரமான முறையில், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.