தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண மாதந்திர கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி எதிர்க்கட்சி அதிமுக கொறடாவும், கவுன்சிலரும், வழக்கறிஞருமான மந்திரமூர்த்தி பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பேசிய வக்கீல் மந்திரமூர்த்தி, “மழையிலும், வெயிலிலும் மக்களுக்காக உழைத்து வரும் தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் பணிபுரியும் பத்திரிகையாளர்கள், மானிய விலையில் வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.
கடந்த கால அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்களுக்காக வீட்டு மனை இடம் ஒதுக்கப்பட்டிருந்த போதும், ஆட்சி மாற்றம் காரணமாக அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதன்பின் திமுக அரசு பொறுப்பேற்றதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து மனுக்கள் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், “இதே மாநகராட்சி கூட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இது குறித்து பேசப்பட்டபோது, விரைவில் தீர்வு காணப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் குற்றம் சாட்டினார். எனவே, பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக மானிய விலையில் வீட்டு மனை பட்டா வழங்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனுடன், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
அதேபோல், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக சுட்டிக்காட்டிய மந்திரமூர்த்தி, “நெரிசலை தவிர்க்க அருகிலுள்ள ராஜாஜி பார்க் வழியாக மாற்று சாலை ஏற்படுத்த வேண்டும்” என அதிமுக சார்பில் வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கைகள் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.