தூத்துக்குடி – திருநெல்வேலி செல்லக்கூடிய பிரதான சாலையில், சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரிலும் அன்ட்ரோ டீ ஸ்டால் அருகிலும் உருவாகியுள்ள மிகப்பெரிய பள்ளம், நாளுக்கு நாள் விபத்து அபாயத்தை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கோரிக்கை வைத்தும், இதுவரை எந்தவிதமான உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் பள்ளம் தெளிவாக தெரியாததால் வாகன ஓட்டிகள் திடீரென வளைந்து செல்லவோ அல்லது பிரேக் அடிக்கவோ வேண்டிய நிலை உருவாகி, பெரிய விபத்து நடக்கும் சூழல் நிலவுகிறது.
“விபத்தை தடுப்பதற்காக முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வரவில்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்த பிறகே தான் விடிவுகாலம் வரும் போலிருக்கிறது” என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். உயிரிழப்பு அல்லது பெரும் சேதம் ஏற்பட்ட பிறகே நடவடிக்கை எடுப்பது சரியான நிர்வாகமா என்ற கேள்வியும் அவர்கள் எழுப்புகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும், விபத்து நடக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருமித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.