தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. போகி, தை பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் நான்காம் நாளான காணும் பொங்கல் ஆகிய நாட்களில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். குறிப்பாக காணும் பொங்கல் தினத்தில் கடற்கரை, ஆறு, பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் பெருமளவில் கூடுவது வழக்கமான ஒன்றாகும்.
காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் பொதுமக்களை வரவேற்க முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகரில் வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முத்துநகர் கடற்கரை, முயல்தீவு கடற்கரை, புதிய துறைமுக கடற்கரை, ரோச் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் காணும் பொங்கல் தினத்தில் பொதுமக்கள் திரளாக கூடுவர். அதேபோல், மாநகரின் பிரதான பூங்காவான ராஜாஜி பூங்கா, நேரு பூங்கா, எம்ஜிஆர் பூங்கா, விவிடி பூங்கா, சங்கரநாராயணன் பூங்கா, தனசேகரன் நகர், மில்லர்புரம், போல்டன்புரம், கால்டுவெல் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள் உட்பட மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படும் சுமார் 53 பூங்காக்களும் காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாராக உள்ளன.
இதனை முன்னிட்டு, மாநகராட்சி பூங்காக்களில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 60 வார்டுகளிலும் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான பூங்காக்கள் செயல்பட்டு வருவதாகவும், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியோடும் பூங்காக்களை பயன்படுத்தும் வகையில் மின்விளக்குகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, அமர்வதற்கான இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை போடுவதற்காக அனைத்து பூங்காக்களிலும் தனித்தனி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவற்றை சரியாக பயன்படுத்தி, சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“தூத்துக்குடி மாநகராட்சி தூய்மையான மாநகராட்சி என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. அதற்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு அவசியம். காணும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அனைத்து பூங்காக்களிலும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பணியில் இருப்பார்கள். அனைவரும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியோடும் பூங்காக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது இளநிலை பொறியாளர் லெனின், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச் செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் கந்தசாமி, மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.