தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுவெளிகளில் குப்பைகளை எரிப்பதால் காற்று மாசடைந்து, பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கடும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. குறிப்பாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை எரிப்பதால் எழும் புகை, சுவாசக்கேடு, கண் எரிச்சல், தோல் நோய்கள் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது.
குப்பைகளை எரிப்பதால் காற்றில் நச்சு வாயுக்கள் கலப்பதால், சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு, மக்கும் – மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து மாநகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
மேலும் நெகிழி (ப்ளாஸ்டிக்) தாள்கள் மற்றும் பைகளைக் களிமண் எரிப்பது பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, பொதுமக்கள் பொதுவெளியில் எந்தவிதமான குப்பைகளையும் எரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இந்நிலையில், “குப்பைகளை எரிக்க வேண்டாம் – நோய்களை பரப்ப வேண்டாம்” என்ற பாடல் வரிகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் தமிழன்டா கலைக்குழு நிறுவனரும் கலைசுடர் மணி செ. ஜெக ஜீவன். மக்கள் மத்தியில் சுத்தமான சூழல், ஆரோக்கியமான வாழ்க்கை என்ற நோக்கில் தொடர்ந்து சமூகப் பொறுப்புடன் செயல்படுவதை அவர் வலியுறுத்தி வருகிறார்.
சுத்தமான காற்றை சுவாசிக்க நாம் செய்ய வேண்டியது ஒரே ஒன்று—
குப்பைகளை எரிப்பதை நிறுத்துவோம்… இயற்கையை பாதுகாப்போம்!