தூத்துக்குடி, நவம்பர் 19 கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் சித்தர் பீடத்தில் இன்று கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் மஹா யாகம் மிகத் திரளான பக்தர்கள் பங்கேற்பில் நடைபெற்றது. தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற இத்தலம், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தெய்வீகத் தலமாகப் போற்றப்படுகிறது.
சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் காலை 10 மணிக்கு கணபதி ஹோமம் வழிபாட்டைத் தொடங்கியது. பின்னர் மஹா பிரத்தியங்கிராதேவிக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.
மதியம் 12.30 மணிக்கு பக்தர்களின் கடன்தொல்லை நீங்கி எதிரி துன்பங்கள் விலக, திருமண வரம், குழந்தை பாக்கியம், நல்ல வேலை, செல்வ வளம் பெற வேண்டி மிளகாய் வற்றல் மஹா யாகம் நடைபெற்றது. தொடர்ந்து மஹா காலபைரவர் மற்றும் மஹா பிரத்தியங்கிராதேவிக்கு விசேஷ அலங்காரம், தீபாராதனையும் நடந்தது.
நிகழ்ச்சியின் இறுதியில், திரளான பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. மஹா யாகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டன. பக்தர்கள் அனைவரும் தெய்வ அருளைப் பெற்றுவிட்டு ஆனந்தமாகப் பீடத்தில் இருந்து திரும்பினர்.