சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்று வரும் “தி.மு.க 75 – அறிவுத்திருவிழா” நிகழ்ச்சி இரண்டாம் நாளாக இன்று (09.11.2025) சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில் கூறியதாவது “அமைச்சர் உதயநிதி, மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் இந்த அறிவுத்திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறார். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு திசைகளிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஏனெனில், அவர்களின் ஒரே இலக்கு நாம்தான்.
நமது பாரம்பரிய எதிரிகளும், பரம்பரை எதிரிகளும், எல்லாருக்கும் எதிரியாக ஒரே கட்சி என்றால் அது திமுகதான். அதற்குப் பெருமையாக கைத்தட்டக்கூடிய ஒரே கட்சி திமுகதான். அறிவியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் அவர்களை எதிர்த்து பேசக்கூடிய ஒரே கட்சி நாம் தான் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.”
அவர் மேலும் தெரிவித்தார் “திராவிட இயக்கம் உருவானதிலிருந்தே அது ஒரு சமூகப் புரட்சியின் இயக்கமாக இருந்து வருகிறது. அந்த இயக்கம் தான் மொழி, அறிவு ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்டு அடக்குமுறைக்கும், சமுதாய அநீத்திக்கும் எதிராக போராடியது.
‘அறிவு’ என்ற ஆயுதம், ‘மொழி’ என்ற ஆயுதம் — இவை சாதாரண மக்களையும் உயர்த்தியன. ஒருகாலத்தில் சிலருக்கே கல்வி, இலக்கியம், திரைப்படம், பத்திரிகை எழுதும் உரிமை இருந்தது. ஆனால், திராவிட இயக்கம் அந்த எல்லைகளை உடைத்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, கலை, இலக்கியம் என அனைத்து துறைகளிலும் சம உரிமையை அளித்தது.”
அவர் தொடர்ந்தும் கூறினார்:
“திரைப்படங்களில் ஒருகாலத்தில் சமஸ்கிருதம் கலந்த மொழிதான் நிலவியது. பொதுமக்களின் மொழிக்கு இடமில்லை. ஆனால், அந்த நிலையை மாற்றியது திராவிட இயக்கம். அது தான் மக்கள் பேசும் மொழியையும், மக்களின் வலியையும் மேடைகளிலும் திரையுலகத்திலும் வெளிப்படுத்தியது.
மேடை நாடகங்கள் புராணங்களுக்குள் மட்டுமே இருந்தபோது, சமூக உண்மைகளை பேசக் கற்றுக்கொடுத்தது திராவிட இயக்கம் தான். தெரு தெருவாக நூலகங்கள் திறந்து, ‘எல்லாராலும் படிக்கலாம், சிந்திக்கலாம்’ என்ற உணர்வை விதைத்தது திராவிட இயக்கமே.”
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது அரங்கின் வெளியில் 50 புத்தகக் கடைகள் கொண்ட பெரிய அளவிலான முற்போக்கு புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருவதாகவும், அறிவை மையமாகக் கொண்ட விழாவாக இதை நடத்தி வருவதில் பெருமை கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.
இவ்விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்று உரையாற்றினர். ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ எனும் கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.