Breaking News

30 வருட பிரச்சனைக்கு 3 மணி நேர தீர்வு – “மழைநீர் கதையை முடித்தோம்!”: தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்!!

  • Share on

வடகிழக்கு பருவமழை துவங்கிய முதல்நாளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை தூத்துக்குடி மாநகரம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் பழைய மாநகராட்சி அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, குருஸ் பெர்னாண்டு சிலை அருகே உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது.

இந்நிலையில், அதிகாலை 5 மணி முதலே தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் அதிகாரிகளுடன் இணைந்து ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்:
“தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநீர் கால்வாய் சீரமைப்புகள் போன்றவை திட்டமிட்டு செய்யப்பட்டன. அதன் பலனாக, கடந்த காலங்களில் மழை பெய்தாலே மூன்று நாட்கள் நீர் நிற்கும் பகுதிகளில் இப்போது 3 மணி நேரத்தில் நீர் முழுவதும் வடிந்துவிட்டது.

பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே எப்போது மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. ஏழு சென்டிமீட்டர் மழை பெய்த போதிலும் இரண்டு மணி நேரத்தில் மழைநீர் முழுமையாக வடிந்தது.

மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் 5 வார்டுக்கு ஒரு டிவிஷன் பிரிக்கப்பட்டு, அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று வார்டுகளுக்கு ஒரு சுகாதார அதிகாரி பணியில் உள்ளார். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் லாரி மூலம் நீர் அப்புறப்படுத்தப்படுகிறது. 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பில் உள்ளனர்.

பி.என்.டி. காலனி போன்ற பகுதிகளில் முன்பு பல மாதங்கள் மழைநீர் தேங்கியிருக்கும். இப்போது பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் ஒரு சில இடங்களில் மட்டும் தண்ணீர் காணப்படுகிறது; ஒரு மணி நேரத்தில் அவையும் சரியாகும். பிஎம்சி பள்ளி முன்பு முன்பு தண்ணீரில் தத்தளித்தது, ஆனால் இந்த முறை அங்கு ஒரு சொட்டு நீரும் இல்லை,” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:
“முத்தம்மாள் காலனி, ரஹ்மத்துநகர், மடத்தூர், தனசேகர்நகர் போன்ற பகுதிகள் 30 வருடங்களாக மழைநீரால் பாதிக்கப்பட்டவை. இன்று அந்த நிலை முழுமையாக மாறியுள்ளது. 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்தாலும் இனி தண்ணீர் தேங்காது. முன்பு 45 நாட்கள் நீர் நிற்கும் நிலை இருந்தது; இப்போது மூன்று மணி நேரமே போதுமானது!

மாநகராட்சி பகுதியில் மருத்துவ சேவைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. நகரத்தில் உள்ள 12 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பணியில் உள்ளனர். நாளை முதல் மருத்துவ முகாம்களும் நடைபெறவுள்ளன,” என்றார் மேயர்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


  • Share on

விவசாயிகளுக்காக புதிய புவியீர்ப்பு கால்வாய் கோரிக்கை – சட்டப்பேரவையில் சண்முகையா எம்எல்ஏ வலியுறுத்தல்!!

ஒளியும் ஒற்றுமையும் இணைந்த தீபாவளி — தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் 26 வகை பரிசுகள் வழங்கல் விழா!

  • Share on

Trending News