தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், பேரூர் ஊராட்சி புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் விமர்சையாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான மாண்புமிகு கீதாஜீவன் தலைமையேற்றார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், “திமுக உருவாக்கப்பட்டதிலிருந்து பல தடைகளை தாண்டி தமிழ்நாட்டின் அரசியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. கலைஞர் ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று தமிழக முன்னேற்றத்திற்கும், தேசிய அளவிலான அரசியலிலும் தனித்த அடையாளத்தை பதித்தார். இன்று அவரது கொள்கைகளைப் பின்பற்றி, திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இங்கு இருக்கும் ஒவ்வொரு மாணவரும் திமுக செய்துள்ள சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஒவ்வொருவரும் குறைந்தது 50 வாக்குகளை திமுகவிற்காக திரட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தலில், தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் உழைக்க வேண்டும். மாணவரணி தான் திமுகவின் வெற்றிக்கு முதுகெலும்பு.
புதிய வாக்காளர் பட்டியலில் 18 வயது நிறைவு பெற்ற இளைஞர்களைச் சேர்க்கும் பணியில் மாணவர்கள் தீவிரம் காட்ட வேண்டும். இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்; தங்களின் ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் திமுகவை 7வது முறையாக ஆட்சியில் அமரச் செய்யும்,” என்று உறுதியுடன் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் கோகுல்நாத், ஆகாஸ்பாண்டியன், கனகவா, பிரதீபா, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் சத்யா, கார்த்தி, மாநகர அணி நிர்வாகிகள் ரவி, மணி அல்பட், பேரூர் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநகர மாணவரணி அமைப்பாளர் டைகர் வினோத் நன்றியுரை வழங்கினார்.