வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி நகரில் நடைபெறவுள்ள கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான தேவையான முன்னேற்பாடுகளை அரசு சார்பில் செய்து தருமாறு, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவனிடம் கரோல் வாகன கொண்டாட்டக் கண்காணிப்புக் குழுவினர் கோரிக்கை வைத்தனர்.
தூத்துக்குடி போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், குழுத் தலைவர் அலங்கார பரதர், செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் இக்னேசியஸ் ஆகியோர் இணைந்து மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டதாவது:
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி இரவு தூத்துக்குடி மாநகரில் கரோல் வாகன அணிவகுப்பு விழா நடைபெற்றது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிகழ்ச்சி நகரின் பாரம்பரியமான விழாவாக மகிழ்ச்சியுடன் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக காவல்துறை நிர்வாகம் இந்த அணிவகுப்பை சிறப்பாக ஒருங்கிணைத்து வருகிறது என்பது பாராட்டத்தக்கது.
ஆனால், கடந்த ஆண்டு நிகழ்ச்சியின்போது சில காவல்துறை அதிகாரிகளின் கவனக்குறைவால், எந்தவித முன்னறிவிப்புமின்றி சில சாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, நகை திருட்டு உள்ளிட்ட பிரச்சினைகள் எழும் சூழ்நிலை ஏற்பட்டது. காவல்துறை தரப்பில் "அணிவகுப்பில் உயரமான பொம்மைகள் மற்றும் காட்சிகள் இருந்தன" என்பதே காரணமாக கூறப்பட்டது. இதை முன்கூட்டியே கவனிக்காதது குறித்து பொதுமக்களிடையே கேள்விகள் எழுந்தன.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மட்டுமின்றி, சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ சமூகம் மட்டுமல்லாமல் பல்வேறு மதத்தைச் சார்ந்த மக்களும் கலந்துகொண்டு மகிழ்வது இதன் சிறப்பு. இதுபோன்ற நிகழ்ச்சி இந்தியாவில் கோவா மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு இடங்களிலேயே இவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறது.
எனவே, இந்த ஆண்டும் (2025) எந்தவித குறைபாடும் ஏற்படாமல் அரசு சார்பில் ஒழுங்குமுறை ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மின்சாரம், பாதுகாப்பு, போக்குவரத்து, மற்றும் பொதுமக்கள் வசதிக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் கரோல் வாகன கொண்டாட்டக் கண்காணிப்புக் குழு நிர்வாகிகள் ரூஸ்வால்ட், ஜோசப் மணி, விஜயன், பெசில் கோஸ்தா, செல்வம், பெனிட்டன் ஆகியோர் உடனிருந்தனர்.