தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, இணை ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடக்கத்தில் கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தோருக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பேசுகையில் மேயர் ஜெகன் பெரியசாமி, மழைக்காலத்திற்கான முன்னேற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அன்னம்மாள் கல்லூரி மற்றும் முள்ளக்காடு வழியாக மழைநீர் கடலுக்குச் செல்லும் வகையில் வடிகால் அமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோரம்பள்ளம் குளம் வழியாக முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகள் கடலுடன் இணைக்கும் 12 கி.மீ நீள வடிகால் சீரமைப்பு நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 60 வார்டுகளில் மொத்தம் 21,759 தெருவிளக்குகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றை பராமரிக்க 26 பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 420 சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருவதோடு, அடுத்த கட்டமாக மேலும் 400 சாலைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து விளக்கமளித்த அவர், பழைய பைப் லைன் மாற்றப்பட்டு புதிய பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், வல்லநாட்டிலிருந்து வரும் முக்கிய பைப் லைனில் ஏற்பட்ட கோளாறுகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், மாநகராட்சி பகுதியில் 206 பூங்காக்கள் செயல்பாட்டிற்கு வரும் வகையில் புதுப்பிப்பு மற்றும் புதிய பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சிறிய குடியிருப்பு பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படுவதாக உறுதியளித்த மேயர், “பொது நலனில் எந்த வேறுபாடும் இன்றி பணிகள் மேற்கொள்ளப்படும்” எனக் கூறினார். மேலும், பிளாஸ்டிக் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன், திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அகமது, சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர், நெடுமாறன், ராஜபாண்டி உள்ளிட்ட அதிகாரிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.