பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை எம் மண்ணைவிட்டு நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்திற்கு உட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை மூடிடக் கோரி பல்வேறு வகையானப் போராட்டங்களில் கிராம பொதுமக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயற்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் கழிவுகள் காரணமாக காற்று மாசுபாடு, நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் வேளாண் நிலங்களின் பாதிப்பு ஆகிய சீரழிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம் மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற உடல்நலக் குறைவுகளை எதிர்கொள்கின்றனர்.
இந்த ஆலைகளில் முறையற்ற சேமிப்பு மற்றும் கழிவு மேலாண்மை காரணமாக துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இந்த ஆலைகளை எதிர்க்கும் விதமாகத் தொடர்ந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். முதலில் இந்த ஆலைகளை உடனடியாக மூடிட வேண்டும்.
அதோடு எம் மண்ணைவிட்டும் நிரந்தரமாக இந்த மீன் கழிவு ஆலைகளை அகற்ற வேண்டும். அதுபோல ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதோடு விதி மீறல்கள் குறித்து ஆய்வு செய்திடவும் விதிகளை மீறிய ஆலைகளின் உரிமம் பறிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மக்கள் நல உரிமை சார்பில் வலியுறுத்துகிறேன். என்று அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.