தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாக போட்டியில் எஸ்.டி.கே. ராஜன் அணி ஒரு பிரிவாகவும், டி.எஸ்.எப். அணி ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர். அதன்படி இவ்விரு அணியினரும் மாறிமாறி அதிக அளவில் கோர்ட்டுக்கு சென்ற நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, திருமண்டல தேர்தலை நடத்துவதற்காக, நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி, ஆலோசகர்களாக நீதிபதிகள் ரத்தினராஜ், ஜான் சந்தோசம், பேராயராக (பொறுப்பு) செல்லையா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து திருமண்டல தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்தலின் தொடக்கமாக, ஜுலை 13 ம் தேதி தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வாக்காளர் பட்டியல் ஒட்டப்பட்டது.
மேலும் சபை மக்களால் மேல்முறையீடு செய்யப்பட்டு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் (ஜூலை 23) அந்தந்த ஆலயங்களில் ஒட்டப்படுகிறது. பின்னர் முதல் கட்டமாக செப்டம்பர் 7 ம் தேதி திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபை பிரதிநிதிகள் தேர்தல் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறுகிறது.
தொடர்ந்து பல்வேறு பதவிகளுக்கான தேர்தல்கள் சேகர மற்றும் சபை மன்ற அளவில் நடைபெறுகிறது. இறுதியாக நவம்பர் 12,13 தேதிகளில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல உபதலைவர், லே செயலர், குருத்துவ காரியதரிசி, திருமண்டல பொருளாளர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை சி.எஸ்.ஐ ஆலயத்தின் முன்பு "வேதமே வெளிச்சம்" என்று தலைப்பிட்டு கட்டப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டால், புதுக்கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. "இந்த திருமண்டல தேர்தலில் நல்லவர்களை, விலை போகாதவர்களை, குருவானவர் தலைமையில் வரவு செலவு செய்யும் கமிட்டி செயல்பட ஆதரியுங்கள்" என்றும், இறுதியில், 'தேர்தல் பணிக்குழு, முத்தான முதல் அணி" என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனால், 3 வதாக ஒரு புதிய அணி உருவாகி உள்ளதாக தெரிகிறது. முக்கியமாக இந்த அணி மூலம், ஆளுங்கட்சி பிரதிநிதிகள் உள்ளூர் பிரமுகர்கள், வசதியானவர்கள் என பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.