மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் சாதனைகள் படைக்க வேண்டும் என்று ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார்.
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஊர்வசி செல்வராஜ் நினைவு பொறியியல் கல்வி திட்டத்தின் மூலமாக சென்னையில் உள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் 2025 - 26ம் கல்வி ஆண்டுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 25 மாணவ, மாணவிகளுக்கு இலவச பொறியியல் கல்விக்கான உத்தரவு கடிதம் வழங்கும் விழா சாத்தான்குளம் ஊர்வசி அகடமியில் நடைபெற்றது.

விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் பார்த்தசாரதி, கோதண்டராமன், பிரபு, கிருபாகரன், ஜெயராஜ், சக்திவேல், முருகன், ரமேஷ் பிரபு, சற்குரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்விக்கான உத்தரவு கடிதத்தினை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது மாணவ மனைவிகள் ஒவ்வொருவரும் இதுபோன்று படிக்கும் போதே கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலமாக நீங்கள் நாளைய உலகில் சரித்திரம் பெரும் சாதனையாளர்களாகவும், உருப்பெற்று வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பெரியதாழை. சுரேஷ், மாவட்ட செயலாளர் பிச்சிவிளை சுதாகர், மாவட்ட பொதுச் செயலாளர் நிலமுடையான், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.