தூத்துக்குடியில் ஏற்கனவே நடந்து முடிந்த பணிக்கு மீண்டும் மாநகராட்சி இ-டெண்டர் கோரியதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. இதுசம்பந்தமாக தெற்கு மாவட்ட பாஜக சார்பில் எட்டையபுரம் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்ததாவது :-
கடந்த ஏப்ரல் மாதம் 4 ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஒரு டெண்டர் நோட்டிஸ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில் ஆறு பணிகள் (வேலைகள்) இருந்தது. இந்த பணிகள் அனைத்தும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடைபெறுவதாக விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. அவர் வெளியிட்டு இருந்த டெண்டர் அறிக்கையில் 25 ம் தேதி மாலை மூன்று மணிக்கு முன்பாக டெண்டர் கோருபவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மாலை 3.30 மணியளவில் அந்த டெண்டர் ஓபன் செய்யப்படும் என்று விளக்கம் தர பட்டிருந்தது.
அந்த டெண்டரை படிக்கும் போது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. டெண்டரில் கொடுக்கப்பட்ட மூன்று பணிகள் (வேலைகள்) ஏற்கனவே முடித்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் சகோதரி கனிமொழி கருணாநிதி அவர்களாலும், அமைச்சர் கீதா ஜீவன் அவர்களாலும் திறக்கப்பட்டு இருந்தது. அதாவது பிப்ரவரி 17 ம் தேதியே திறந்து வைத்துள்ளார்கள்.
பிப்ரவரி மாதம் 17 ம் தேதி திறக்கப்பட்டு சகோதரி கனிமொழி கருணாநிதி அவர்கள் அவர்களது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள். அதாவது பி.என்.டி காலனியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து இருக்கிறோம். அடுத்தது 45 லட்சம் மதிப்பீட்டில் முதியோருக்கான மகிழ் விட பூங்காவை திறந்து வைத்து இருக்கிறோம். என்று பிப்ரவரி மாதம் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட திட்டத்திற்கு அதாவது பணிகளுக்கு (வேலைகள்) ஏப்ரல் மாதம் டெண்டர் வெளியிடுகிறார் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், அதோடு மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள மைதானம் எல்லோருக்கும் தெரியும், அதில் ரோடும், நடை பாதையும், 75 சதவீதம் முடிந்து விட்டது. ஏற்கனவே தூத்துக்குடி மாநகராட்சி மீது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெண்டர்கள் முறைப்படி நடைபெறவில்லை, ஆணையர், மேயர், அமைச்சர் ஆகியோரின் வேண்டிய நபர்களுக்கு டெண்டர் விடப்படுவதாக கூறுகிறார்கள். வேலை முடிந்த பிறகு அவர்களது விருப்பப்படி பில் வேல்யூ செய்கிறார்கள். டெண்டர் முறை எதுக்காக வகுக்கப்பட்டுள்ளது. போட்டியாக நான்கு பேருக்கு மேல் கேட்பார்கள்.
பிப்ரவரி மாதம் முடித்த திட்டங்களுக்கு ஏப்ரல் மாதம் டெண்டர் வெளியிடுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு தூத்துக்குடி பாஜக சார்பில் ஏப்ரல் 20 ம் தேதிக்கு பிறகு மாவட்ட ஆட்சியரிடம் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் டெண்டரில் முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது. எனவே டெண்டரை ஓபன் செய்யக்கூடாது என்று மனு ஒன்றை அளித்தோம். இந்த செய்தி எல்லா பத்திரிக்கையிலும் பிரசரிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் சர்வாதிகார ஆட்சி போல, ஒரு தேசிய கட்சி சார்பில் மனு ஒன்றை அளித்த நிலையிலும் கூட எங்களுக்கு எந்த கவலையும் கிடையாது என்று டெண்டரை ஓபன் செய்கிறார்கள். மாநகராட்சி (நாங்கள்) நினைத்தால் ஓபன் செய்வோம் என்று ஓபன் செய்தார்கள். அவர்களது நடவடிக்கையில் முறை கேடுகள் இருந்த காரணத்தால் வேறுவழியின்றி தூத்துக்குடி பாஜக சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றம் கோடை விடுமுறை நாட்களாக இருந்த காரணத்தால் நேற்று தான் தாங்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார்கள். நீதிமன்றம் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. மாநகராட்சி சார்பில் விடப்பட்ட டெண்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி இரண்டு வாரத்திற்குள் டெண்டர் சம்மந்தமான விளக்கம் அளிக்கவேண்டும். அது சம்பந்தமான அணைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள்.
இந்த உத்தரவு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவுக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். முறைகேடுகளில் ஈடுபட்டு மாநகராட்சி ஆணையர், மற்றும் மாநகராட்சியின் இன்ஜினியர்கள், அதிகாரிகள் உட்பட அனைவர் மீதும் அரசு மற்றும் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மிகவும் நேர்மையானவர் என்று தூத்துகுடி மக்களால் போற்றப்பட்டு வருகிறார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற பிறகு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் கட்டிடம் முழுவதும் புதுப்பிக்கும் பணி நடைபெற இருக்கிறது என்று கூறி நன்றாக இருந்த கட்டிடத்தை அனைத்தையும் உடைத்து சுமார் 8 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி மாநகராட்சி கட்டிடம் மற்றும் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று கூட புதிய பேருந்து நிலையம் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்தது. தூத்துக்குடியில் எந்த அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை, அதை நிவர்த்தி செய்யாமல் அவர் இருக்கும் அலுவலகத்தை புதுப்பித்து ஏசி அனைத்தும் புதுசாக வாங்கி மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்து இருக்கிறார்கள். இதற்கு மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வழக்கு தொடரும் நிலை ஏற்படும் என்று செய்தியாளர் சந்திப்பின் போது தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்தார்.