தூத்துக்குடி சி.வ.குளம் ஆழப்படுத்தும் பணி மற்றும் முள்ளி குளம் பராமரிப்பு பணி நடைபெறுவதற்கு மக்கள் வரிப்பணம் விரயம் ஆக்கப்பட்டுள்ளது. என்று இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை கேட்கும் நாள் கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் மாரியப்பன் மனு அளித்து பொதுமக்கள் வரிப்பணத்தை விரயமாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் இளம் பகவத் யிடம் அளித்த மனுவில் தெரிவித்ததாவது :-

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சில்வர்புரம் சர்வே எண் :- 336/2ல் உள்ள சி.வ.குளம் 129 ஏக்கர் கொண்டது. சி.வ.குளம் ஆழப்படுத்தும் பணி மற்றும் முள்ளிகுளம் பராமரிப்பு பணி 2019ம் ஆண்டு ரூ.11.50 கோடி செலவில் ஆழப்படுத்தும் பணி நடந்துள்ளது. ஆனால், அதற்குப் பிறகு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ரூ.1 கோடி செலவில் நடைபாதை அமைக்கப்பட்டதாக மாநகராட்சி சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த இடத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் K.N. நேரு பார்வையிட்டு உள்ளார். ஆனால் இவ்வளவு பணம் செலவழித்து. இன்று 2025 வரை ஒரு பொதுமக்கள் கூட பயன்பெறும் வகையில் அமைக்கப்படவில்லை. இந்த குளத்திற்கு செல்லும் வழிபாதை பூட்டப்பட்டு சீமை கருவேல முற்களாக காட்சியளிக்கிறது.
இந்த குளத்திற்கு முறையான வாய்க்கால்கள் அமைக்காததால் குளத்தில் தண்ணீர் நிரம்பவில்லை, மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை மேம்படுத்தினால் சுற்று வட்டார மழைநீரை சேமிக்கலாம். தூத்துக்குடிக்கு வெள்ளம் வரும்போது இந்த குளம் யாருக்கும் பயன்படாமல் இருக்கிறது. பெயர் தான் குளம் ஆனால் தண்ணீர் இருக்காது. நடைபாதைக்காக அமைக்கப்பட்ட இரும்புவேலிகள், கான்கிரிட் கட்டமைப்புகள் அனைத்தும் சிதிலமைந்து மிகவும் மோசமான ஒரு நிலைமை உருவாகி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

குளத்தின் இருபுறங்களிலும் கான்கிரிட் தடுப்பு சுவர் அமைத்து அதன்பிறகு நடைபாதைகள் அமைத்திருந்தால் குளத்தின் கரைகள் உடைந்திருக்காது. ஆனால் மேற்படி குளத்தினை சுற்றி மண் குவியல்களின் மேல் நடைபாதை அமைக்கப்பட்டதால் மழைநீரில் சிதிலமடைந்து யாருக்கும் பயனற்ற நிலையில் உள்ளது.
மேலும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி நிதியில் செலவழித்த ரூ.1 கோடி பொதுமக்கள் வரிப்பணம் முழுக்க விரயமானது. மக்களின் வரிப்பணத்தை இப்படி விரயமாக்கலாமா? குளத்தின் அனைத்து கரைகளும் மழைநீரில் உடைந்து பல இலட்ச ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளது.

துத்துக்குடி மாநகராட்சிக்குப் பாத்தியப்பட்ட சி.வ.குளம் அமைந்துள்ள பகுதி சுமார் 129 ஏக்கர் ஆகும். அதனை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யும் சூழல் உருவாகி உள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் எடுத்து தனி கவனம் செலுத்தி சி.த. குளத்தை பாதுகாக்க வேண்டுகிறோம்.
மேற்படி குளத்தை ஆழப்படுத்துதல், மேம்படுத்துதல் பணிகளில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக அறிகிறேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கு பவர்களிடமிருந்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். என்று ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.