தூத்துக்குடி மாநகராட்சியில் LR காப்பி (Land Record Copy) வழங்கும் நடைமுறையில் விதிமீறல்கள் நடை பெற்றுள்ளதா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட கோப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர். சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.
நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக LR காப்பி உள்ளது. நிலத்தின் சர்வே எண், உட்பிரிவு, பரப்பளவு, நிலத்தின் வகைப்பாடு உள்ளிட்ட பதிவுசார் விவரங்களை அறிந்து கொள்ளவும், நிலம் தொடர்பான பல்வேறு பணிகளுக்கும் இந்த ஆவணம் பயன்படுத்தப் படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி வாயிலாக பொதுமக்களுக்கு LR காப்பி வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்திலேயே பழைய முறையில் கையால் எழுதப்பட்ட ஆவணங்களுக்கு பதிலாக, ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையில் மட்டுமே LR காப்பி வழங்க வேண்டும் என வருவாய்த்துறை உதவி இயக்குநர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த அறிவுறுத்தலுக்குப் பின்னரும் மாநகராட்சி மூலம் கையேடு முறையில் LR காப்பி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதத்திற்கு முன்பே LR காப்பி பெறுவதற்காக விண்ணப்பம் அளிக்கப் பட்டதாகக் கூறி, அந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் தற்போது கையேடு முறையில் ஆவணங்கள் வழங்கப் படுகிறதா? அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால், அந்த விண்ணப்பங்கள் உண்மையில் எப்போது பெறப்பட்டன? யார் அனுமதி வழங்கினர்? எந்த அதிகாரத்தின் அடிப்படையில் தற்போது LR காப்பிகள் வழங்கப்படுகின்றன? என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோப்புகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்
மேலும், பிப்ரவரி மாதத்திற்குப் பின்னர் கையால் எழுதப்பட்ட LR காப்பியை பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்யக்கூடாது என ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தால், அதன் பின்னரும் சார்பதிவாளர் எந்த ஆவணத்தின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட LR காப்பிகளுக்கு அனுமதி வழங்கிய அதிகாரி யார், எந்த கோப்பின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது, விண்ணப்பங்கள் பெறப்பட்ட தேதி என்ன, ஆவணங்கள் வழங்கப்பட்ட தேதி என்ன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட கோப்புகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
விதிமீறல் அல்லது தவறு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால், அதற்கு பொறுப்பான அதிகாரிகள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.
மேலும், LR காப்பி வழங்கும் நடைமுறையை முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றி, விண்ணப்பித்த தேதி, அனுமதி வழங்கிய அதிகாரி, ஆவணம் வழங்கப்பட்ட தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளிப்படையாகப் பதிவாகும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.