தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் தேசிய தன்னார்வ இரத்ததான தின விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடையே இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, 100 சதவீதம் தன்னார்வ இரத்தக் கொடையாளர்கள் மூலம் இந்தியாவின் இரத்தத் தேவையைப் பூர்த்தி செய்வதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். பணப் பயன் எதையும் எதிர்பாராமல், பிறர் உயிரைக் காக்க வேண்டும் என்ற நல்நோக்கத்துடன் பொதுமக்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்வதை மக்கள் இயக்கமாக மாற்றுவதும், விபத்துகள், மகப்பேறு கால அவசரநிலைகள் மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகளின்போது ஏற்படும் திடீர் இரத்தப் பற்றாக்குறையைத் தவிர்க்க போதிய இரத்த இருப்பை உருவாக்குவதும் இதன் நோக்கங்களில் அடங்கும்.
தொடர்ந்து இரத்ததானம் செய்து பிறர் உயிரைக் காக்கும் தன்னார்வ இரத்தக் கொடையாளர்களைப் பாராட்டி கௌரவிப்பதுடன், மற்றவர்களையும் இரத்ததானம் செய்ய ஊக்குவிப்பதும் தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதையொட்டி, கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் இரத்ததானம் செய்த 96 தனிநபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், அதிக எண்ணிக்கையில் இரத்ததான முகாம்களை நடத்தி 165 இரத்த அலகுகளை தானமாக வழங்கிய ‘மகிழ்வித்து மகிழ்’ அறக்கட்டளைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குநர் பி. ஜாய்சன் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. எபனேசர் ஜோயல் குமார், துணை முதல்வர் மரு. கலைவாணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. பத்மநாபன், இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு. சாந்தி, முதுநிலை ஆய்வக நுட்புநர் முத்து ஜெயந்தி, மருத்துவர்கள் மற்றும் தன்னார்வ இரத்தக் கொடையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.