பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனாரின் 134-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் இலக்கியச் செல்வர் மா.பொ.சி. கலை இலக்கிய மன்றம் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.



தூத்துக்குடி சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு இலக்கியச் செல்வர் மா.பொ.சி. கலை இலக்கிய மன்றத் தலைவர் லாரன்ஸ் தலைமை வகித்தார். விழாவில் தூத்துக்குடி செய்தியாளர் குமாரவேலுக்கு அவரது பத்திரிகைப் பணியைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத் தலைவர் சண்முகசுந்தரம், குமாரவேலுக்கு பாண்டியனார் விருதை வழங்கினார்.



தொடர்ந்து, மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து வரும் புத்தக வாசிப்பு மன்றத் தலைவர் மற்றும் எழுத்தாளர் ஆ.மாரிமுத்துவுக்கும் பாண்டியனார் விருது வழங்கப்பட்டது.



விழாவில் நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ், விருது பெற்ற குமாரவேல் மற்றும் ஆ.மாரிமுத்துவை வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து விருது பெற்ற இருவரும் ஏற்புரையாற்றினர்.



நிகழ்ச்சியில் அரசு ஓய்வுபெற்ற அலுவலர் செரீப், சமூக ஆர்வலர் ஜனார்த்தனன் டேவிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இலக்கியச் செல்வர் மா.பொ.சி. கலை இலக்கிய மன்ற அமைப்பாளர் ரவி நன்றி கூறினார்.