தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட ஊரணி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப் படாமலேயே பாழடைந்து தூர்ந்து போனதாகவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலையின் வீ த லீடர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



இதுகுறித்து அண்ணாமலையின் வீ த லீடர் இயக்க நிர்வாகி உமரி எஸ். சத்தியசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



தூத்துக்குடி மாநகராட்சியுடன் கடந்த 2008-ம் ஆண்டு இணைக்கப்பட்ட அத்திமரப்பட்டி ஊராட்சியில் நூற்றாண்டுகள் பழமையான ஊரணி இருந்து வந்தது. பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும், கால்நடைகளின் நீர் ஆதாரமாகவும், மழைநீர் சேமிப்பிடமாகவும் இந்த ஊரணி பயன்பட்டு வந்தது. மேலும், அப்பகுதியில் அமைந்திருந்த விநாயகர் கோவிலிலும் பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.



மாநகராட்சியுடன் அத்திமரப்பட்டி இணைக்கப்பட்ட பின்னர், ஊரணி அமைந்துள்ள பகுதி தெற்கு மண்டலத்தின் 58-வது வார்டாக மாறியது. முள்ளக்காடு பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் அமைந்துள்ள இந்த ஊரணியில் மாநகராட்சி சார்பில் ஓராண்டுக்கும் மேலாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. சுமார் ரூ.1 கோடி நிதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.



ஆனால், ஊரணியின் ஒரு பகுதியில் மட்டுமே சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பாலத்தின் மறுபுறம் அமைந்துள்ள மற்றொரு பகுதி கடந்த 18 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. அப்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதுடன், தனியார் ஆக்கிரமிப்புக்கு இடமளிக்கும் வகையில் நிலை காணப் படுகிறது.



மேலும், அங்கு இருந்த விநாயகர் கோவில் மட்டும் அகற்றப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டுள்ள நிலையிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.



மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், ஊரணி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமலேயே மீண்டும் பாழடைந்து தூர்ந்து போயிருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



எனவே, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் பிரியங்கா மற்றும் மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் வரிப்பணம் வீணாகாமல் ஊரணியை முறையாக சீரமைத்து, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி, உடனடியாக பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும், கடந்த 18 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள ஊரணியின் மற்றொரு பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அண்ணாமலையின் வீ த லீடர் இயக்கம் தயாராக உள்ளது. இதற்கு தேவையான அனுமதியை அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.