தூத்துக்குடி அருகே முள்ளக்காடு முதல் பழையகாயல் வரை உள்ள சுமார் 1,700 ஏக்கர் உப்பளப் பகுதியை கையகப்படுத்தி கப்பல் கட்டுதளம் அமைப் பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், உப்பள உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கப்பல் கட்டுதளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முத்தையாபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைச் செயலாளர் சந்தனகுமார் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மண்டல துணைச் செயலாளர் வழக்கறிஞர் அர்ஜுன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலச் செயலாளர் ஆட்டோ கணேசன், முன்னாள் மாநில இளஞ்சிறுத்தை பாசறை செயலாளர் முரசு தமிழப்பன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட மகளிர் அணி செயலாளர் முருகேஸ்வரி, மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி துணைச் செயலாளர் விஜி பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் வனவாளவன், வழக்கறிஞர் காளிபவுன்ராஜ், சிக்கந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் வழக்கறிஞர் அர்ஜுன் கூறியதாவது:
தென் கொரிய நிறுவனத்தின் சார்பில் புதிதாக கப்பல் கட்டுதளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வழிகாட்டுதலின்படி, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
உப்பு உற்பத்தி நடைபெறும் பகுதிகளை கையகப்படுத்தி கப்பல் கட்டுதளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். கடலோரப் பகுதிகளில், குறிப்பாக கீழவைப்பார் முதல் மணப்பாடு வரையிலான கடல் சார்ந்த பகுதிகளில் மக்கள் பயன்பாட்டில் இல்லாத இடங்களைத் தேர்வு செய்து கப்பல் கட்டுதளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தால் உப்பளத் தொழிலாளர்கள் மட்டுமின்றி மீனவ மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, தமிழக அரசு உடனடியாக இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும்.
எந்தக் கட்சி ஆதரவு தெரிவித்தாலும், தெரிவிக் காவிட்டாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்கள் பக்கம் நிற்கும். உப்பளப் பகுதிகளை அழித்து கப்பல் கட்டுதளம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முழுமையாக முன்னெடுப்போம்.
இந்த ஆர்ப்பாட்டம் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் வழிகாட்டு தலின்படியே நடைபெறுகிறது. நாளை போராட்டக் குழுவினர் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். ஏற்கனவே இந்த மக்கள் பிரச்சினை குறித்து தொல். திருமாவளவனிடம் தெரிவித்துள்ளோம். அவர் உப்பளப் பகுதிகளை நேரில் பார்வையிட வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு வழக்கறிஞர் அர்ஜுன் தெரிவித்தார்.