தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ. கருணாநிதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.



கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கூறியதாவது:



பாபநாசம் அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் வர வேண்டிய நிலையில், தற்போது 200 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளேன். சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராக உள்ளனர். ஆனால், விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கூடுதலாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும், நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளேன். இதுதொடர்பாக உயர் நீதிமன்றமும் 15 நாட்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.
நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றினால், மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பெரும் பாதிப்பைத் தவிர்த்து, சுமார் ரூ.1000 கோடி அளவிலான இழப்பை மிச்சப்படுத்த முடியும். எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.



10 செ.மீ. மழையையும் எதிர்கொள்ள மாநகராட்சி தயார்: மேயர் ஜெகன் பெரியசாமி



ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 10 செ.மீ. மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



மேலும், மாநகராட்சி பகுதிக்கு வெளியிலிருந்து மழைக்காலங்களில் வரும் வெள்ளநீரை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மறவன்மடம் அருகே மழைநீர் செல்லும் பகுதியில் கல்வெட்டு அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



கூட்டத்தில் கருணாநிதி எம்.எல்.ஏ., திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், இம்மானுவேல், கவுன்சிலர் முத்துவேல், வட்டச் செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.