தமிழக சட்டமன்றத்தில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக கூறி, அதனை கண்டித்தும், சட்டமன்ற மாண்பை குலைக்கும் வகையில் செயல்படுவதாகவும், ஜனநாயக விரோத போக்கை கடைபிடிக்கும் தவெக அரசை கண்டித்தும் தூத்துக்குடியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், கருணாநிதி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



ஆர்ப்பாட்டத்தில் கீதாஜீவன் பேசியதாவது:



விஜய் சினிமா கவர்ச்சி மற்றும் குழந்தைகள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்த நாள் முதல் எந்தவித பொறுப் புணர்வும் இல்லாமல் பேசி வருகிறார். யாரோ ஒருவர் எழுதிக் கொடுப்பதை படித்துவிட்டு செல்வது போல் செயல்படாமல், 50 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறுகளை முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும்.



சட்டமன்றத்தில் மிசா காலகட்டம் மற்றும் கமிஷன் தொடர்பான தகவல்களை தவறாக எடுத்துரைத்து திமுக தலைவர் ஸ்டாலின் மீது குற்றச் சாட்டுகளை தெரிவித்துள்ளனர். அந்த கருத்துகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். திருமணமான ஐந்து மாதங்களிலேயே மிசா கொடுமையை அனுபவித்தவர் ஸ்டாலின் என்பதை தெரிந்து கொண்டு பேச வேண்டும்.



சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளிப்பதில்லை. அதற்கு பதிலாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் பதிலளித்து வருகின்றனர்.



“உங்களுடைய ரீல்ஸ் ஆட்சிக்கு அளவே இல்லையா?” என கேள்வி எழுப்பிய கீதாஜீவன், தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்ததற்கு கலைஞர் மற்றும் ஸ்டாலின் ஆட்சிகளின் பங்களிப்பை யாராலும் மறைக்க முடியாது என்றார்.



தவெக ஆட்சி வந்த காலத்திலிருந்து தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் புகார்கள் என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், அதுகுறித்து கேள்வி எழுப்பினால் விவகாரத்தை திசைதிருப்பு வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.



அமலாக்கத்துறை வழக்குகளை வைத்து ஒருவரை குற்றவாளி என கூறுவது ஏற்புடையதல்ல. ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் மீது அமலாக்கத்துறை வழக்குகள் இருந்தாலும், அதனால் அவர்கள் குற்றவாளிகளாகிவிட முடியாது. முழுமையான வரலாற்றை தெரிந்து கொண்டு பேச வேண்டும். தமிழ்நாட்டிற்கு பல்வேறு வகையில் தலைகுனிவு ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது. நாகரிகமாக பேச வேண்டும் என்றார்.



மேலும், தவெக பெண் நிர்வாகி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து ஆதாரங்களுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவை பார்த்து “கல்லாப்பெட்டி ஆட்சி” என விமர்சிப்பவர்கள், தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளின் கருத்துகளும் தங்களுக்கு எதிராக இருப்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் கீதாஜீவன் தெரிவித்தார்.



“திமுகவை வசைபாடாவிட்டால் 3 அமைச்சர்களுக்கு தூக்கம் வராது” – ஜெகன் பெரியசாமி



ஆர்ப்பாட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், திமுகவை தொடர்ந்து வசைபாடாவிட்டால் மூன்று அமைச்சர்களுக்கு தூக்கம் வராது. உங்களுடைய கோமாளி வேஷம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதை மறந்து விடாதீர்கள் என்றார்.



மிசா சட்டம் அமல்படுத்தப் பட்டபோது விஜய்க்கு இரண்டு வயது மட்டுமே இருக்கும். தற்போது போராட்டம் வந்தால்கூட மூன்று நாட்கள் முதலமைச்சர் விஜய் வெளியே வரமாட்டார் என விமர்சித்தார். திமுக ஆட்சியில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி நல்ல நிலையில் இருந்தது. தற்போது தொழில் முதலீடுகள் உள்ளிட்டவை ஆந்திர மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



மேலும், திமுகவில் ஆதவ் அர்ஜுனா சில காலம் இருந்தபோது, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை நடை முறைப்படுத்த வேண்டும் என தலைவரிடம் கூறியதாகவும், அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் “சட்டத்திற்கு புறம்பான எந்த செயலிலும் நான் ஈடுபட மாட்டேன்” என்று தெரிவித்ததையடுத்து அவர் திமுகவில் இருந்து வெளியேறியதாகவும் ஜெகன் பெரியசாமி கூறினார்.



தமிழகம் முழுவதும் தற்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், தூத்துக்குடியில் எங்கெங்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என்பதற்கான பட்டியலை அளிக்கத் தயாராக இருப்பதாகவும், காவல்துறை நடவடிக்கை எடுக்க தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.



“உங்களுடைய ரீல்ஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர இடைத்தேர்தல் ஒரு பாடமாக அமையும்” என்றும் ஜெகன் பெரியசாமி பேசினார்.



“சட்டமன்ற மரபுகளை மீறாதீர்கள்” – மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.



மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், அரசியல் கட்சி மேடையில் முதலமைச்சர் விஜயின் எலும்பை உடைப்பேன் என்று பேசியதற்காக தன்னை கைது செய்து 15 நாட்கள் சிறையில் அடைத்ததாக குறிப்பிட்டார்.



அதேபோல், திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து சட்டமன்றத்தில் பல்வேறு சைகைகள் மூலமாகவும், உண்மைக்கு புறம்பான வகையிலும் கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில், அதற்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.



ஒரு காலத்தில் விஜயும் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டிய நிலை வரலாம் என்றும் அவர் கூறினார். பெண்களை பற்றி தவறாக பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறும் முதலமைச்சர், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது தாய், தந்தைக்கு இணையாக மற்ற இருவரை அதே வரிசையில் வைத்து மரபுகளை மீறிய தாகவும் மார்க்கண்டேயன் விமர்சித்தார்.



தவெக நிர்வாகிகள் பலர் மீது பாலியல் புகார்கள் வருவதாகவும், பெண்கள் குறித்து முதலமைச்சர் தெரிவிக்கும் கருத்துகளுக்கு சட்டமன்றத்தில் கீதாஜீவன் இல்லையே என்ற வருத்தம் தனக்கு இருப்பதாகவும், அவர் இருந்திருந்தால் அதற்கு தக்க பதிலடி கொடுத்திருப்பார் என்றும் தெரிவித்தார்.



எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட பல முதலமைச்சர்கள் அமர்ந்து நிர்வாகம் செய்த சட்டமன்றத்தின் மரபுகளை மீறாமல் செயல்பட வேண்டும் என்றும் மார்க்கண்டேயன் வலியுறுத்தினார்.



நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு



ஆர்ப்பாட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, வடக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன், செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில நிர்வாகிகள் புளோரன்ஸ், அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், அன்புராஜன், செல்வராஜ், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, காசி விஸ்வநாதன், நவநீதகண்ணன், ஜெயகண்ணன், இம்மானுவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, நகர செயலாளர் ரமேஷ், மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், கவிதாதேவி, அந்தோணி ஸ்டாலின், சீனிவாசன், வக்கீல் குபேர் இளம்பரிதி, ராமலட்சுமி, சௌந்தர்ராஜன், அபிராமி நாதன், அருணாதேவி, பிரபு, நாகராஜன், பிரதீப், ராதாகிருஷ்ணன், சின்னத்துரை, கணேஷ்குமார், நிக்கோலாஸ் மணி, ராமர், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.



மாநகர துணைச் செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், கிறிஸ்டோபர் விஜயராஜ், ஆனந்தசேகர், ஜெயக்கனி, முருகஇசக்கி, டேனியல், அருண்சுந்தர், ரூபஸ் அமிர்தராஜ், செல்வின், ரவி, நாராயணவடிவு, ரூபராஜா, ரெக்ஸ், செல்வலட்சுமி, பிக்-அப் தனபால், வினோத், மகேஸ்வரன் சிங், சாரதி, நைஸ் பரமசிவம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



மேலும் மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமார், சோம பாண்டியன், வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், ராஜாமணி, முனியசாமி, கதிரேசன், சுப்பையா, சதீஷ்குமார், பாலகுருசாமி, முக்கையா, சுரேஷ், செல்வராஜ், பொன்ராஜ், மனோ, அல்பட், சிங்கராஜ், டென்சிங் உள்ளிட்டோரும், கவுன்சிலர்கள் சரவணக்குமார், இசக்கிராஜா, ஜான்சிராணி, வைதேகி, ஜெயசீலி, பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், விஜயக்குமார், பட்சிராஜ், ராஜதுரை, சோமசுந்தரி, அதிஷ்டமணி, சந்திரபோஸ், எடிண்டா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.



தெற்கு மாவட்ட திமுக முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகையா, மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஜெபத்தங்கம் பிரேமா, ஆறுமுகப்பெருமாள், பொருளாளர் ராமநாதன், மாநில நிர்வாகி உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாடசாமி, செந்தூர்மணி, பிரம்மசக்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சொர்ணகுமார், ஆறுமுகபாண்டியன், முத்துச் செல்வன், சாகுல்ஹமீது உள்ளிட்ட தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.