தூத்துக்குடி உப்பளம் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மாற்று இடத்தில் அமைக்க வலியுறுத்தி முள்ளக்காடு, கோவளம், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறிய அளவிலான உப்பு உற்பத்தி யாளர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர் களையும் நேரில் சந்தித்து தங்களது போராட்டத்திற்கு ஆதரவு கோரி வருகின்றனர்.



இந்த நிலையில், தென் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, மீண்டும் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார்.



அப்போது, தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சேகர் தலைமையில், பொருளாளர் பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் ரகுபதி, முகேஷ், சண்முகவேல், பாலசுப்ரமணியன், எல்.ஆர். சிவாகர், வழக்கறிஞர் பாஸ்கர், பால்ராஜ் உள்ளிட்டோர் சௌமியா அன்புமணியை சந்தித்தனர்.



அவர்கள், தூத்துக்குடி உப்பளங்களை பாதுகாக்கவும், உப்பளப் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்று இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், இப்பிரச்சினை தொடர்பாக சட்டமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என கோரிக்கை மனுவும் அளித்தனர்.



இதனிடையே, ஏற்கனவே சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து, ஆதரவு பெற்றிருப் பதையும் உப்பு உற்பத்தி யாளர்கள் சௌமியா அன்புமணியிடம் நினைவு படுத்தினர்.



கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ., உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக உறுதியாக துணை நிற்பதாகவும், பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கைகளுக்கு குரல் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.