பசுமைத் தாயகம் மற்றும் சென்னைவாழ் நெல்லை மக்கள் நலச் சங்கம் இணைந்து நடத்திய “தாமிரபரணியின் நலவிரும்பி களுக்குப் பாராட்டு – விவசாயிகள் சந்திப்பு விழா” திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள பாலன் மகாலில் இன்று நடைபெற்றது.
விழாவுக்கு முன்னாள் அரசுச் செயலர் எஸ்.டி.சுந்தரேசன் ஐ.ஏ.எஸ். தலைமை வகித்தார். சென்னைவாழ் நெல்லை மக்கள் நலச் சங்கத் தலைவர் எம்.சைமன் ஜெயக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.



விழாவின் முக்கிய நிகழ்வாக, தாமிரபரணியைப் பாதுகாக்கவும், அதன் முக்கியத்துவம் குறித்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்ததற்காகவும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும் பசுமைத் தாயகம் தலைவருமான முனைவர் சௌமியா அன்புமணிக்கு “தாமிரபரணி நாயகி” விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



தொடர்ந்து, “தாமிரபரணியின் பயணமும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முனைவர் சௌமியா அன்புமணியின் பங்கும்” என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து முனைவர் சௌமியா அன்புமணி பாராட்டுச் சான்றிதழ் பெற்று விழாப் பேருரை ஆற்றினார். தாமிரபரணியைப் பாதுகாப்பதன் அவசியம், விவசாயத்தின் எதிர்காலம் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு குறித்து அவர் பேசினார்.



சகா கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி



விழாவின் சிறப்பு அம்சமாக, சகா கலைக்குழு நிறுவனர் முனைவர் சகா சங்கர் தலைமையில் சகா கலைஞர்களின் சிறப்பான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தாமிரபரணி மற்றும் விவசாயத்தின் முக்கியத்து வத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. சகா கலைஞர்களின் கலை நிகழ்ச்சிக்கு விழாவில் பங்கேற்றவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



மேலும், அழிந்துவரும் விவசாயத்தைப் பாதுகாப்பது தொடர்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட விவசாயிகளுடன் முனைவர் சௌமியா அன்புமணி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் தாமிரபரணி நீர்வளத்தைப் பாதுகாப்பது, விவசாயத்தை மேம்படுத்துவது, விவசாயிகளின் பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர்.



நிகழ்ச்சியில் எழுத்தாளர் மற்றும் பா.ம.க. பொருளாளர் திலகபாமா, பசுமைத் தாயகம் ஒருங்கிணைப் பாளர்கள் வழக்கறிஞர் கே.சகிலா, சீயோன் தங்கராஜ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். சென்னைவாழ் நெல்லை மக்கள் நலச் சங்க பொதுச்செயலாளர் சி.சங்கர்மணி நன்றியுரை ஆற்றினார்.



விழாவில் தாமிரபரணி ஆர்வலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தாமிரபரணியைப் பாதுகாப்பது, விவசாயத்தை வளப்படுத்துவது, நீர்வளத்தை எதிர்கால தலைமுறைக்காகப் பாதுகாப்பது ஆகியவற்றில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.