கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கிருஷ்ணன், ராதை வேடமணிந்த சிறுவர், சிறுமியர்கள் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.



இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இந்துக்களால் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறுவர், சிறுமியர்கள் கிருஷ்ணன் மற்றும் ராதை வேடமணிந்து கோவில்களுக்குச் சென்று விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.



தூத்துக்குடி மேலூர் பங்களா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் திருக்கோவிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில், கிருஷ்ணன் மற்றும் ராதை வேடமணிந்த சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவனை எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் சிறுவர், சிறுமியர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது குழந்தைகளிடம் அவர்களின் படிப்பு விவரங்களைக் கேட்டறிந்த கீதாஜீவன், “நன்றாகப் படித்து பெற்றோருக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்.



நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர் கண்ணன், வட்டச் செயலாளர்கள் கங்காராஜேஷ், கருப்பசாமி, வட்டப் பிரதிநிதி பாஸ்கர், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.