தூத்துக்குடி வடக்கு ரத வீதி, பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவில் உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், விநாயகர் கோவில் நடை திறக்கப்படாமல் மூடப்பட்டி ருந்தது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.



விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இரவு நேரத்தில் சப்பரத்தில் விநாயகர் வீதி உலாவும் நடைபெறும். ஆனால், தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இதுபோன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறாமல், கோவில் நடை மூடப்பட்டி ருந்ததாக கூறப்படுகிறது.



இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி நாளிலேயே விநாயகர் கோவில் திறக்கப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக ஆன்மிகவாதிகள் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து வஉசி பேரவை மாநிலத் தலைவரும், அரசு ஊழியர் ஓய்வுபெற்றோர் சங்கத் தலைவருமான மாரியப்பன் கூறியதாவது:



“சித்தி விநாயகர் கோவில் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோவிலை எங்கள் குடும்பத்தினர் கட்டி அரசிடம் ஒப்படைத்தனர். காலம் காலமாக எங்கள் குடும்பத்தினரே கோவிலில் பூஜைகள் செய்து வருகின்றனர்.



விநாயகர் சதுர்த்தி நாளில் கோவில் நடை திறக்கப்படாமல் மூடப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், யாகசாலை பூஜைகள், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம். ஆனால், இன்று அவை எதுவும் நடைபெறாமல் கோவில் மூடப்பட்டிருப்பது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.



கோவில் அர்ச்சகரை தொடர்புகொள்ள முயன்றபோது அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியையும் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை.



எனவே, விநாயகர் சதுர்த்தி நாளில் கோவில் மூடப்பட்டதற்கான காரணத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்க வேண்டும். கோவில் நிர்வாகத்தில் அலட்சியம் இருந்திருந்தால், சம்பந்தப் பட்டவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் மாரியப்பன்.