தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி வி.வி.டி. பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொட்டிக்கு வரும் குடிநீரின் அளவு மற்றும் அதிலிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அப்பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.



மேலும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது பகுதி செயலாளர் சுரேஷ்குமார், தொமுச மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, மாவட்டப் பிரதிநிதி ராஜ்குமார், கவுன்சிலர் ராமு அம்மாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.