தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததுடன், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டு கின்றனர்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவில்பட்டி, மதுரை, சென்னை, பெங்களூரு, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய பேருந்து நிலையமாகவும் இது உள்ளது.
ஆனால், பேருந்து நிலையத்தில் உள்ள பல கடைகள் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய பாதைகளை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் நடந்து செல்வதற்கே சிரமம் ஏற்படுகிறது. மேலும், பேருந்து நிலையம் முழுவதும் இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதாலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மூடப்பட்டுள்ள மாநகராட்சி அறைகள்
பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள அறை பூட்டப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அதேபோல், பயணிகள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொருட்கள் வைக்கும் அறையும் பூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்களின் பாதுகாப் புக்காக பேருந்து நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ள புறக்காவல் நிலையமும் பெரும்பாலான நேரங்களில் செயல்படாமல் பூட்டியே கிடப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
கழிப்பறையில் மது பாட்டில்கள்
புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையில்
பயன்படுத்தப்பட்ட மது பாட்டில்கள் குவிந்து கிடப்பதாகவும், மது அருந்துவதற்கு பயன்படுத்தப் பட்ட கிளாஸ்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவை கிடப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக் கின்றனர்.
இதனால் கழிப்பறையை பயன்படுத்துவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கழிப்பறை மது அருந்தும் இடமாக மாறியுள்ள நிலையில், இதனை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பேருந்து நிலையத்திலேயே வரிசையாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள்
மேலும், புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் உள்ள வாகனங்கள் பேருந்து நிலைய வளாகத்திலேயே வரிசையாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுவும் பயணிகளின் நடமாட்டத்திற்கு இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டு கின்றனர்.
பேருந்து நிலையத்தில் கடைகளின் ஆக்கிரமிப்புகள், இருசக்கர வாகனங்களின் ஆக்கிரமிப்பு, மூடப்பட்டுள்ள மாநகராட்சி அறைகள், செயல்படாத புறக்காவல் நிலையம் மற்றும் கழிப்பறையின் அவல நிலை ஆகியவற்றை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்து கின்றனர்.
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் நிலவும் இந்தப் பிரச்சினைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து நீடிக்குமா? என்பதே தற்போது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.