தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் தூத்துக்குடி டூவிபுரம் சந்திப்பில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆண்ட்ருமணி தலைமை வகித்தார். அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட பொருளாளர் சேவியர், பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், சுடலைமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் முருகன் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பேசியதாவது:
பேரறிஞர் அண்ணா பெரியாரின் கொள்கைகளில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக விலகி தி.மு.க.வை தொடங்கினார். பின்னர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அண்ணாவின் உருவம் பொறித்த கொடியுடன் அ.தி.மு.க.வை தொடங்கினார். தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றிகளை பெற்றது. 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். 130 இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சரானார். ஆனால், விஜய் 108 இடங்களில் வெற்றி பெற்று, மற்றவர்களின் ஆதரவுடன் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்று கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது; 118 இடங்கள் பெரும்பான்மைக்கு தேவைப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்தது. “தமிழகத்தில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் உள்ள நிலையில், தங்களுக்கு கிடைத்த வாக்குகளை மட்டும் வைத்துக்கொண்டு பெருமை பேசுவதைவிட மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் ஆதாரப் பூர்வமான தகவல்களுடன் கேள்வி எழுப்பும்போது, அதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைச்சர்கள் திணறுகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர்களை தரக்குறைவாக பேசிவிட்டு செல்வதுதான் ஆட்சியாளர் களின் வேலையாக இருக்கிறது. சட்டமன்றத்தில் ஜனநாயக முறையில் விவாதம் நடைபெற வேண்டும்; சினிமா கூத்து நடைபெறுவது போல் இருக்கக்கூடாது.
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றதாக கூறிவிட்டு, அங்கு வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக குற்றம்சாட்டப் படும் நிலை உள்ளது. விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அ.தி.மு.க.வில் இருந்து சிலரை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டு, அவர்களை வைத்துக்கொண்டு ஊழலற்ற ஆட்சி வழங்குவேன் என்று கூறுவது எப்படி சாத்தியமாகும்? எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு கொள்கை பிடிப்புடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் எங்களுடன் உள்ளனர்.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், முதலமைச்சர் விஜய் சினிமா மோகத்தில் சுற்றித்திரிகிறார்” என்று விமர்சித்தார்.
“தொகுதிக்கு என்ன செய்தார்?” – சித. செல்லப்பாண்டியன்
மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித. செல்லப்பாண்டியன் பேசுகையில், “தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீநாத் யார் என்றே தெரியாத நிலையில், தொகுதிக்கும் சம்பந்தமில்லாமல் வெற்றி பெற்றுவிட்டார். ஏதாவது நல்லது செய்வாரா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. சட்டமன்றத்தையும் கேலி கூத்தாக்கி வருகின்றனர். தொகுதி மக்களின் அவதிகளை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்” என்றார்.
“அதிமுக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய கட்சி” – ஜான் தங்கம்
அமைப்பு செயலாளர் ஜான் தங்கம் பேசுகையில், “தமிழகத்தில் 30 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப் பட்டன. பல்வேறு சாதனைகளை படைத்த கட்சி அ.தி.மு.க.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நான்கரை ஆண்டுகள் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர் எடப்பாடி பழனிசாமி” என்றார்.
“தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி குறித்து அமைச்சரிடம் தெளிவான பதில் இல்லை” – சின்னச்சாமி
தலைமை பேச்சாளர் சின்னச்சாமி பேசுகையில், “தூத்துக்குடியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகியுள்ள ஸ்ரீநாத்திடம் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதை தூத்துக்குடியில் வந்து கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற முக்கிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் தெளிவான பதில் அளிக்க வேண்டும். சண்முகநாதன் அமைச்சராக இருந்திருந்தால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கு அரசு முழுமையாக துணை நிற்கும் என்று கூறியிருப்பார்” என்றார்.
“எடப்பாடி தலைமையில் 47 இடங்களில் வெற்றி” – செல்வி கவி
தலைமைக் கழக இளம் பேச்சாளர் செல்வி கவி பேசுகையில், “2026 சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது குறிப்பிடத்தக்க தேர்தல் முடிவாகும்.
சட்டமன்றத்தை பல்வேறு விவாதங்களின் மையமாக மாற்றி, யார் எந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் அமைச்சர்கள் பேசுவது விசித்திரமாக உள்ளது.
விஜய் தற்போது முதலமைச்சர் என்பதை மறந்துவிடக்கூடாது. அரசுப் பதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அதற்கு பொறுப்பானவர்கள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஒரு கொலை சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வரலாறு உள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று கூறும் அரசு, தமிழகத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கும் உரிய பதில் அளிக்க வேண்டும்” என்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் வசந்தா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜூலியட், முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை, ஒன்றிய செயலாளர்கள் ராஜ் நாராயணன், குணசேகரன், மனோகரன், அப்பாதுரை, பேரூராட்சி செயலாளர் வேதமாணிக்கம், ஆறுமுக நயினார், அரசகுரு, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, தலைமை பேச்சாளர்கள் கருணாநிதி, முருகானந்தம் மற்றும் பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் நன்றி உரையாற்றினார்.