பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றன. அதன்படி, மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 20-வது வார்டு பகுதி சபா கூட்டம் கீதா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், வார்டு பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:
தூத்துக்குடி மாநகராட்சி கடந்த 2022-ம் ஆண்டை விட தற்போது பல்வேறு வகைகளில் வளர்ச்சி பெற்றுள்ளது. பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன.
20-வது வார்டில் சொத்துவரியாக ரூ.93 லட்சம் வசூலிக்க வேண்டிய நிலையில், இதுவரை ரூ.23 லட்சம் மட்டுமே வசூலாகி யுள்ளது. இன்னும் ரூ.70 லட்சம் நிலுவையில் உள்ளது. அதேபோல், குடிநீர் கட்டணமாக ரூ.46 லட்சம் வசூலிக்க வேண்டிய நிலையில், இதுவரை ரூ.8 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது.
இன்னும் ரூ.38 லட்சம் வசூலிக்க வேண்டியுள்ளது. மாநகராட்சிக்கு தேவையான வருவாய் கிடைத்தால்தான் மக்களுக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியும். பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வருபவர்கள், முன்பு இருந்த தூத்துக்குடிக்கும் தற்போதைய தூத்துக்குடிக்கும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி சென்னை மவுண்ட் ரோடு போன்று வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறுகின்றனர்.
குடிநீர் வழங்குவதற்கு சில இடங்களில் சாலைகள் உடைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பணிகள் முடிந்ததும் அந்த சாலைகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப் படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வழித்தடங்களுக்கு மூடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முன்பு அமைக்கப்பட்ட 21 முதல் 29-வது வார்டு வரையிலான கழிவுநீர் வழித்தடங்களுக்கும் படிப்படியாக மூடிகள் அமைக்கப்பட்டு சுகாதாரம் பாதுகாக்கப்படும்.
பக்கிள் ஓடையின் 7 கிலோமீட்டர் பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. 14 வழித் தடங்களும் தற்போது சீரமைக்கப் பட்டு வருகின்றன. மடத்தூர் முதல் 4-வது கேட் வரையிலான சாலை அகலப்படுத்தப் பட்டுள்ளது. டூவிபுரம் 5-வது தெரு சாலையும் அகலப்படுத்தப் பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி எப்படி இருக்க வேண்டும் என்பது எனது 50 ஆண்டு கனவு. அந்த அடிப்படையில் மாநகராட்சியின் வளர்ச்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. சுவர்களை அழகுபடுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
மாநகராட்சியில் முன்பு 3 பூங்காக்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 53 பூங்காக்கள் உள்ளன. அவற்றை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர். பூங்காக்களில் சிறிய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சில பூங்காக்களிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆற்றுப்படுகையில் போதிய தண்ணீர் இல்லாத நிலையிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சியில் ஒரு வார்டை தேர்வு செய்து 100 சதவீதம் சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு வார்டை தேர்வு செய்து நான்கு வகையான குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன.
முத்துநகர் கடற்கரை பூங்காவில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பூங்காக்களில் விளையாட்டு பயிற்சியாளர்கள் மூலம் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரண்டு விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தினசரி குடிநீர் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும். எதிர்காலத்தில் மாநகராட்சி மேலும் பல்வேறு வளர்ச்சிகளை பெறும். பல்வேறு தொழி ற்சாலைகளும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிறிய சாலைகள் அமைக்கப் படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து சாலைகளும் அமைக்கப்படும்.
அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் மழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை மற்றும் மழைக்காலப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், பிரியங்கா, கவுன்சிலர்கள் கீதா முருகேசன், தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், பகுதி சபா உறுப்பினர்கள் ஐசக், பேச்சிமுத்து, அற்புதராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்ட பிரதிநிதி அருணகிரி, சுப்பிரமணி, ஜெயபாண்டி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.