சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி 50-வது வார்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.



விழாவிற்கு வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் கலந்து கொண்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் பேசுகையில், “தூத்துக்குடி மாவட்டம் சுதந்திரப் போராட்டத்திற்காகப் போராடி உயிர்நீத்த தலைவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். அதிலும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடத்திய போராட்ட வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் நாம் ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளன.



இத்தகைய தலைவர்கள் வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்வதே பெருமை. தியாகிகளின் தன்னலமற்ற செயல்களை நாம் எப்போதும் மதித்து போற்றுவோம். தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்க்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆதரவளித்ததைப் போல, வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு முழுமையான வெற்றியை வழங்க வேண்டும்” என்றார்.



இதனைத் தொடர்ந்து, 300 பேருக்கு வேட்டி, சேலைகளும், முதியோர் மற்றும் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 200 பேருக்கு உதவித்தொகையும் என மொத்தம் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.