தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) சமூக மேம்பாட்டுத் திட்டம் (CDP), உன்னத் பாரத் அபியான் (UBA) மற்றும் TOUCH ஆகியவை இணைந்து, YWCA நிறுவனத்தின் ஆதரவுடன், கடற்கரை சமூகங்களுக்கான “கடல் சிப்பி கைவினைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை” நடத்தின.
செப்டம்பர் 8 முதல் 11-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி, கல்லூரியின் விலங்கியல் ஆய்வகத்தில் நடைபெற்றது.
கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரேஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. ஷிபானா, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எம். எஸ். ஏழிலரசி, எஸ்.எஸ்.சி. இயக்குநர் அருட்சகோதரி முனைவர் ஏ. ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ், உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ். புலோமின் ரெஜி மற்றும் விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் பி. ஜே. ஜோஸ்லின் ஆகியோரின் வழிகாட்டுதலிலும் ஆதரவிலும் இப்பயிற்சி நடைபெற்றது.
கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கும் கடல் சிப்பிகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி, அழகிய மற்றும் பயனுள்ள கைவினைப் பொருட்களை உருவாக்குவதன் மூலம் பங்கேற்பாளர்களின் படைப்பாற்றல், தொழில் முனைவுத் திறன் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதே பயிற்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.
மேலும், இயற்கை வளங்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, அதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு களையும் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பயிற்சி அமைந்தது.
பயிற்சியின் வளநபராக தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் எம். பரிபூரணசெல்வி கலந்து கொண்டு, கடல் சிப்பிகளைக் கொண்டு பல்வேறு கைவினைப் பொருட்களை உருவாக்கும் முறைகளை செய்முறைப் பயிற்சியாக வழங்கினார்.
இதில் பங்கேற்றவர்கள் கடல் சிப்பிகளைத் தேர்ந்தெடுத்தல், வடிவமைத்தல், அலங்கரித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளை நேரடியாகக் கற்றுக்கொண்டு, அவற்றை கவர்ச்சிகரமான கைவினைப் பொருட்களாக உருவாக்கும் பயிற்சியைப் பெற்றனர்.
நான்கு நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி, கடல் வளங்களைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதுடன், அவற்றை வாழ்வாதார வாய்ப்புகளாகவும் சுயதொழில் முயற்சிகளாகவும் மாற்றுவதற்கான புதிய சிந்தனையை பங்கேற்பாளர் களிடையே உருவாக்கியது.
இந்நிகழ்வை வெற்றிகரமாக ஒருங்கிணைத்ததில் சமூக மேம்பாட்டுத் திட்டப் பொறுப்பாசிரியர்கள் முனைவர் ஆர். நிரஞ்சனி மற்றும் முனைவர் அ. ஜெனிவி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
கடல் வளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி, கடற்கரை சமூகங்களின் திறன் மேம்பாடு, தொழில் முனைவு மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இப்பயிற்சி, சமூக மேம்பாட்டையும் சுயதொழில் முனைப்பையும் ஒருங்கிணைக்கும் சிறந்த விரிவாக்கச் செயல்பாடாக அமைந்தது.