தூத்துக்குடியில் உள்ள வேலவன் ஹைப்பர் மார்க்கெட் தங்க நகைக்கடையில் ரூ.1 கோடி பணம் கேட்கப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்ரம் ராஜா நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.



கடையின் மேலாளர் சரவணனை சந்தித்த அவர், விவகாரம் தொடர்பான முழு விவரங்களையும் கேட்டறிந்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:



தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பைப் பொறுத்தவரை, சாதி, மதம் உள்ளிட்ட எந்த வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு வணிகர்கள் அனைவரையும் ஒரு தாய் பிள்ளைகளாகவே கருதுகிறோம். வணிகர்களுக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்களுக்கு பாதுகாப்பாக வணிகர் சங்கம் துணை நிற்கும்.



வேலவன் நகைக்கடை விவகாரம் தொடர்பாக சிலர் சாதிய உணர்வுடன் சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருவது தனது கவனத்திற்கு வந்துள்ளது. இந்தப் பிரச்சினையை சாதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். அதேநேரத்தில், ஏதேனும் வணிக நிறுவனம் தவறு செய்திருந்தால், அதையும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தட்டிக்கேட்கும்.



எனவே, இந்த விவகாரத்தை வணிக நிறுவனம் தொடர்பான பிரச்சினையாக மட்டுமே பார்க்க வேண்டும். இதில் சாதி, மதம், மொழி, இனம் உள்ளிட்டவற்றை கொண்டுவரக் கூடாது.



மாநிலத்தின் எந்தப் பகுதியில் வணிகர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நேரில் சென்று அவர்களுக்கு ஆதரவாக நிற்கும். அதன்படியே தூத்துக்குடிக்கும் இன்று வந்துள்ளேன்.



இந்த விவகாரத்தை சாதியை வைத்து திசைதிருப்பாமல், வணிகர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் செயல்பட வேண்டும்.



அடமான நிறுவனங்கள் குறித்தும் ஆய்வு



முத்தூட் பைனான்ஸ் உள்ளிட்ட அடமான நிறுவனங்கள் தொடர்பாகவும் பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.



நகைகளை அடகு வைப்பதில் பின்பற்றப்படும் நடைமுறைகள், வசூலிக்கப்படும் வட்டி உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்படும். மேலும், அடகு வைத்த நகைகளை திருப்பிச் செலுத்துமாறு வாடிக்கை யாளர்களுக்கு நிர்பந்தம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு உண்மை நிலையை கண்டறிந்து, முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தும்.



யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சட்டப்படி முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு விக்ரம் ராஜா தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.