தூத்துக்குடி நேசமணி நகரைச் சேர்ந்தவர் மரியவின்சென்ட் (72). இவர் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.சகாயராஜின் தந்தை ஆவார். சமூக ஆர்வலரான இவர், தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மதுபானக் கடைகள் மூடப்பட்ட பின்னரும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்ததாக கூறப்படும் நேசமணி நகரைச் சேர்ந்த ராஜ் என்ற பொன் கற்பகராஜ் (35) என்பவர் ஆத்திரமடைந்து மரியவின்சென்ட் வீட்டிற்கு சென்று, சட்டவிரோத மது விற்பனை குறித்து எவ்வாறு புகார் அளிக்கலாம் எனக் கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, மரியவின்சென்ட்டை முகம் மற்றும் கண் பகுதியில் கைகளால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது கண் பகுதி பலத்த வீக்கம் அடைந்ததுடன், எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார்.
இதையடுத்து, மரியவின்சென்ட் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மரியவின்சென்ட் அளித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ராஜ் என்ற பொன் கற்பகராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடி கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.சகாயராஜ் கூறுகையில்,
“நான் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், எனது தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் திமுக இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத்தை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளேன். மேலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.