புரட்டாசி மாத சனிக் கிழமைகளை முன்னிட்டு திருக்கோயிலில் சிறப்பு அலங்கார சேவைகள் நடைபெற உள்ளதாகவும், பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் பெருமாள் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
புரட்டாசி மாத சனிக் கிழமைகளை முன்னிட்டு வரும் 26.09.2026 அன்று ஸ்ரீ குருவாயூர் அம்பல அலங்கார சேவையும், 03.10.2026 அன்று ஸ்ரீ பத்மாவதி தாயார் அலங்கார சேவையும் நடைபெறுகிறது. தொடர்ந்து 10.10.2026 அன்று ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி அலங்கார சேவையும், 17.10.2026 அன்று ஸ்ரீ ராஜாங்க அலங்கார சேவையும் நடைபெற உள்ளன. இந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பக்தர்களுக்கும் உபயதாரர்களுக்கும் எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் சாமி தரிசனம் செய்ய அறங்காவலர் குழு சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாமி தரிசனத்தின்போது கோயில் பிராகாரத்தை சுற்றி வருவதற்கு தற்காலிகமாக வசதி இருக்காது. சாமி தரிசனம் செய்த பின்னர் பக்தர்கள் நேரடியாக வெளியே செல்லும் வகையில் உரிய வழித்தட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மேலும், பக்தர்கள் எத்தனை பேர் வந்தாலும் அனைவருக்கும் தேவையான அளவு பிரசாதம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, அனைவரும் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வழிபடுவதற்கு அறங்காவலர் குழு சார்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும். இவ்வாறு செந்தில்குமார் தெரிவித்தார்.
பேட்டியின்போது சிவன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கந்தசாமி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர்கள் ஜெயலெட்சுமி, மகேஷ்வரன் மற்றும் திருக்கோயில் அர்ச்சகர் வைகுண்டராமன் ஆகியோர் உடனிருந்தனர்.