எஸ்.எஸ். மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44-ஆம் ஆண்டு திருவிழா கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலை ஜெபமாலை மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.



திருவிழாவின் இறுதி நாளில் நடைபெற்ற சிறப்பு திருப்பலிக்கு தூய தோமையார் கல்விக் குழுமத் தாளாளர் அருட்பணி. அமலன் தமியான் தலைமை வகித்தார். தூய தோமையார் திருத்தூதர் ஐசிஎஸ்இ பள்ளி முதல்வர் அருட்பணி. இன்பேன்ட் மற்றும் லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்பணி. செல்வன் பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர்.



இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெற்றனர். தொடர்ந்து கேக் வெட்டி வேளாங்கண்ணி மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து அன்னையின் திருவுருவ சப்பர பவனி சிறப்பாக நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அசன விருந்து வழங்கப்பட்டது.



திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தங்கத்தேர் கெபி கமிட்டியினர், புனித வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள் மற்றும் புனித பூண்டிமாதா அன்பிய மக்கள் இணைந்து செய்திருந்தனர்.