தமிழகம் முழுவதும் அரசு ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் அரசு ஓய்வூதியதாரர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஓய்வூதியதாரர்கள், அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஓய்வூதிய தாரர்களுக்கு முறையாக சிகிச்சை கிடைப்பதில்லை என குற்றம்சாட்டினர். பல மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளதாகவும், பல்வேறு அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பெற வேண்டிய நிலை இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ஓய்வூதிய தாரர்களிடம் மாதந்தோறும் ரூ.644 பிடித்தம் செய்யப்படும் நிலையில், தேவையான நேரத்தில் மருத்துவச் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளதாகவும், இதனால் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள் குறித்தும் அவர்கள் விமர்சனம் தெரிவித்தனர். தமிழகத்தில் நிலவும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பும்போது, அதற்கு உரிய பதில் அளிக்க ஆட்சியாளர்கள் மறுப்பதாக குற்றம்சாட்டினர்.
கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்கப் படுவதாகவும், தற்போதைய காலகட்டத்தில் நடைபெறும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
“எங்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் வாக்குரிமைதான். அதன் மூலம் எங்களது கோரிக்கை களுக்கு உரிய தீர்வு காணும் அரசை தேர்வு செய்வோம்” என்று ஓய்வூதியதாரர்கள் ஆர்ப் பாட்டத்தில் தெரிவித்தனர். ஓய்வூதியதாரர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டக் குறைபாடுகளை களைந்து, தங்களுக்கு தேவையான மருத்துவச் சிகிச்சை தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.