“வாழ்க்கைக்காக ஓடுவோம்; போதைப்பொருளுக்கு எதிராக ஓடுவோம்” என்ற விழிப்புணர்வு மையக்கருத்தை முன்னிறுத்தி தூத்துக்குடியில் மராத்தான் போட்டி நடைபெற்றது. கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, வ.உ.சி. துறைமுகம், கல்பகா கெமிக்கல், சிருஷ்டி என்டர்பிரைசஸ், எஸ். தார்சியூஸ் இன்ஜினியரிங், நிலா சீ ஃபுட்ஸ், எஸ்.ஆர்.ஆர்.ஏ. மருத்துவமனை, தமிழ்நாடு ஆர்த்தோ அசோசியேஷன், ஸ்ரீராம் இன்ஜினியரிங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து இந்த மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிர்வாக துணைத் தலைவர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். முன்னதாக கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனத் தலைவர் ரைபின் தார்ச்சியூஸ் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிருஷ்டி என்டர்பிரைசஸ் நிறுவனர் பெர்தினால் தார்ச்சியூஸ், கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவன இயக்குநர் விஸ்வ பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்பகா கெமிக்கல் நிறுவன இயக்குநர் கணேசன், எஸ்.ஆர்.ஆர்.ஏ. மருத்துவமனை மருத்துவர் நவீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மராத்தான் போட்டியில் 2,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 8 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு 3 கிலோமீட்டர் தூரமும், 15 முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும், 18 முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் டி-சர்ட், பதக்கம், சான்றிதழ், டைமிங் சிப் மற்றும் உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு பிரிவுகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதலிடம் பிடித்தவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
இந்த மராத்தான் போட்டியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விகாசா மேல்நிலைப்பள்ளி, கிங் ஆஃப் கிங்ஸ் பள்ளி, காமராஜர் கல்லூரி, ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி, காயல்பட்டினம் இஸ்லாமியக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் பங்கேற்றனர். போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மராத்தான் போட்டி, தூத்துக்குடியில் பெரும் வரவேற்பை பெற்றது.